15 ஆண்டுகால சினிமா போராட்டம்: ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி கூறிய நடிகர் ரிஷிகாந்த்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கவனிக்கத்தக்க நடிகராக உருவெடுத்துள்ள நடிகர் ரிஷிகாந்த், அண்மையில் வெளியான 'டோரதி' மற்றும் 'மொத ராத்திரி' ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு தனது 15 ஆண்டுகால சினிமா பயணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த் ஆகியோருடன் ரிஷிகாந்த் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து செப்டம்பர் 25 அன்று வெளியான 'டோரதி' திரைப்படம் பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது. அதேபோல், ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமாருடன் இவர் இணைந்து நடித்து ஆகஸ்ட் மாதம் வெளியான 'மோத ராத்திரி' திரைப்படமும் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ரிஷிகாந்த் நெகிழ்ச்சி
15 ஆண்டுகாலப் பயணம் அர்த்தமுள்ளதானது
ரசிகர்களின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ள ரிஷிகாந்த், எனது 15 ஆண்டுகாலப் பயணம் அர்த்தமுள்ளது என்பதை உணரவைத்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும், எனக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தப் பயணத்தில் நீண்ட காத்திருப்புகள், போராட்டங்கள், ஏமாற்றங்கள் மற்றும் பாடங்கள் நிறைந்திருந்ததாகவும், ஒரு கட்டத்தில் தனது பயணம் எங்கே சென்று முடியும் என்று தனக்குள்ளேயே கேள்வி எழுப்பிய தருணங்கள் உண்டு எனவும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
நெகிழ்ச்சி பதிவு
ரசிகர்களின் அன்பும் எதிர்காலப் பொறுப்பும்
ரசிகர்கள் அனுப்பிய எண்ணற்ற வாழ்த்துச் செய்திகள், காணொளித் தொகுப்புகள் மற்றும் அழைப்புகளுக்கு உடனடியாகப் பதிலளிக்க இயலாததற்குத் திரைப்பட விளம்பரப் பணிகளே காரணம் எனக் குறிப்பிட்ட அவர், விரைவில் அனைவருக்கும் தனித்தனியாகப் பதிலளிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இந்த வெற்றி தனக்கு கூடுதல் பொறுப்பை அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் என் மீது வைத்துள்ள அன்பு, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளைப் பணிவுடன் சுமக்க விரும்புகிறேன்.
கடினமாக உழைக்கவும், தொடர்ந்து கற்றுக்கொள்ளவும் உறுதியளிக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தில் ஒருவனாகக் கருதிய அனைவருக்கும் நன்றிகள் என்று தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.