இன்று வெளியாக வேண்டிய லோகேஷ் கனகராஜின் மிஸ்டர் பாரத் திரைப்பட ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் (G Squad) தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள புதிய திரைப்படம் மிஸ்டர் பாரத். இந்த திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-
யூடியூப் பிரபலங்கள்
யூடியூப் பிரபலங்களின் அறிமுகமும் நடிகர்கள் விவரமும்
யூடியூப் தளத்தில் பிரபலமான பாரத் மற்றும் நிரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் இணைந்து இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் மற்றும் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.
இவர்களுடன் சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், நகைச்சுவை நடிகர் பால சரவணன், ஆர்.சுந்தர்ராஜன், நிதி பிரதீப், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரணவ் முனிராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பின்னணி
ஒத்திவைப்பிற்கான பின்னணியும் தயாரிப்புக் குழுவின் அறிவிப்பும்
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
இந்நிலையில், திரையரங்க ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் ஏற்பட்ட சில தாமதங்கள் காரணமாகவே ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு இது சற்றே ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், மிக விரைவில் அதிகாரப்பூர்வமான புதிய ரிலீஸ் தேதியை அறிவிப்பதாக லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்த படங்கள்
தயாரிப்பாளராக லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்கள்
இயக்குநராக மாஸ்டர், விக்ரம், லியோ என பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
இதன் மூலம் ஏற்கனவே ஃபைட் கிளப், 29 போன்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி நடிப்பில் பென்ஸ் திரைப்படத்தையும் இவரே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.