"நான் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி" - வீடு திரும்பிய ரஜினிகாந்த் நெகிழ்ச்சி கடிதம்
"நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்" என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "நான் மருத்துவமனையில் இருக்கும்போது, சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கு, திரைப்படத் துறையை சார்ந்தவர்களுக்கு, எனது அன்பு நண்பர்களுக்கு, நல விரும்பிகளுக்கு, பத்திரிகை நண்பர்களுக்கு என அனைத்து மனிதருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் எனது ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."
Twitter Post
பிரதமருக்கும் முதல்வருக்கும் நன்றி கூறிய ரஜினி
மேலும், தான் மருத்துவமனையில் இருந்த போது நலம் விசாரித்த, தான் நலம் பெற வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என். ரவி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமிதாப் பச்சன் என ஒவ்வொருவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ரத்தக் குழாயில் வீக்கம் காரணமாக, நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அறுவை சிகிச்சை இல்லாமல் இடையீட்டு சிகிச்சை மூலம் 'ஸ்டென்ட்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று வீட்டுக்குத் திரும்பினார்.