சூப்பர்ஸ்டார் பர்த்டே ஸ்பெஷல்: சினிமாத்துறையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் தான்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஈகோ இல்லாமல் மொழிகள் தாண்டி கோலிவுட், சாண்டல்வுட், பாலிவுட் என இந்தியாவின் அனைத்து படவுலகில் நெருங்கிய நண்பர்களை பெற்றுள்ளார். இன்றளவும் அவர்களில் வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களுக்கும் ரஜினி குடும்பத்தினருடன் தவறாது கலந்துகொள்வார். அப்படி ரஜினியின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் மற்ற மொழி நடிகர்கள் பற்றி ஒரு சிறு பார்வை இதோ உங்களுக்காக:
ரஜினி- கமல் நட்பு பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது!
ரஜினியும், கமலும் தங்கள் நட்பினால் நம்மை ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரே துறையில் வாழும் இரு பெரும் ஜாம்பவான்கள், ஈகோ எதுவும் இல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வெளியிலும் தங்கள் நட்பை வெளிக்காட்ட தவறியதே இல்லை. இரு நடிகர்களின் ரசிகர்கள் ஆரம்பகாலத்தில் இது புரியாமல் தங்களுக்குள் மோதிக்கொண்டாலும், இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க தவறியதே இல்லை. எந்த சூழலிலும், இருவரும் ஒருவொருக்கொருவர் துணையாக நின்றுள்ளனர்.
தெலுங்கு படவுலகில் ரஜினியின் நண்பர்கள்
மோகன் பாபு: நடிகர் ரஜினியும், மோகன் பாபுவும் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே நண்பர்கள். ஒருமுறை மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, இருவரின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளதோடு, சூப்பர் ஸ்டாராக இருந்தும் அவர்கள் எப்படி நட்பாக இருக்கிறார்கள் என்று எழுதிய பதிவு வைரலாக சென்றது. இவர்கள் இருவரும் இணைந்து, தர்ம யுத்தம், பெத்தராயுடு, அன்னை ஒரு ஆலயம் போன்ற படங்களில் நடித்துள்ளனர். பாலகிருஷ்ணா: பழம்பெரும் நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான NTR-இன் மகனான பாலகிருஷ்ணாவுடனும் நல்ல நட்பை பாராட்டி வருகிறார் ரஜினி. ரஜினிகாந்த், பாலகிருஷ்ணாவை தனது அன்பான சகோதரர் என்றே அழைக்கிறார். பாலகிருஷ்ணா திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த போதும், என்.டி.ஆர்-இன் நூற்றாண்டு விழா உட்பட குடும்பநிகழ்ச்சிகள் அனைத்திலும் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.
உச்ச நடிகர்களுடன் நல்ல நட்பை பேணிய ரஜினி
அம்பரீஷ்: இருவரும் திரைத்துறையில் நுழைந்த காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்தனர். அம்பரீஷின் 60வது பிறந்தநாள் விழாவில் பேசிய ரஜினி, 'ஜலீலா' என்ற படத்திலிருந்து தான் சிகரெட் பிடிக்கும் கலையை கற்றுக்கொண்டதையும் வெளிப்படுத்தினார். மேலும் அவர் அடிக்கடி அம்பரீஷின் வீட்டிற்கு செல்வதையும் கூறினார். இருவரும் கன்னடம்-தமிழ் இருமொழிப் படமான ப்ரியாவில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவர்தன்: மரியாதை கலந்த இந்த நட்பு குறித்தும் ரஜினி பல இடங்களில் தெரிவித்துள்ளார். "ஒருமுறை கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பமாக இருந்தேன். விஷ்ணு சாரிடம் கேட்டபோது, இந்தப் படத்தை கே.பாலசந்தர் இயக்குவதால், தமிழ்ப்படத்தை எடுக்கும்படி அறிவுறுத்தினார். "நம்ம பையன்" தமிழ் படத்தில் நடிப்பது கன்னடர்களுக்கு பெருமை என்றும் கூறினார்"
அமிதாப் பச்சன், மோகன்லால் மற்றும் மம்மூட்டி உடனான நட்பு
அமிதாப் பச்சன்:நடிகர் அமிதாப் உடன் மரியாதை கலந்த நட்பு உள்ளது என்பதை இருவரும் பல இடங்களில் கூறியுள்ளனர். தனிப்பட்ட நட்பை தாண்டி இருவரும் குடும்ப நண்பர்களாக உள்ளனர். அமிதாப்பின் எல்லா சாதனைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் ரஜினியும், அவர் குடும்பத்தாரும் தவறாமல் கலந்துகொண்டுள்ளனர். சமீபத்தில் ரஜினிக்காக,'வேட்டையன்' படத்தில் அமிதாப் நடிக்க ஒப்புக்கொண்டதும் கூட இந்த நட்பின் காரணமாகவே! மோகன்லால்-மம்மூட்டி:மலையாள படவுலகில் இந்த சீனியர் நடிகர்களுடன் ரஜினி எப்போதும் தொழில்முறை தாண்டிய நட்பை பேணி வருகிறார். மம்மூட்டியுடன் 'தளபதி' திரைப்படத்தில் நடிக்கும் முன்னரே நட்பு கொண்டிருந்ததாக ரஜினி பல இடங்களில் தெரிவித்துள்ளார். அதேபோல மோகன்லால் உடனும் ரஜினி தனிப்பட்ட பிரியத்தை கொண்டுள்ளார். அதன் காரணமாகவே 'ஜெயிலர்' படத்தில் மோகன்லால் நடிக்க சம்மதித்தார் என செய்திகள் கூறுகின்றன.