மக்களை காண தயாராகும் சோழர் படை; விரைவில் PS 2கான ப்ரோமோஷன் வேலைகள் துவங்க போகிறது
வரும் ஏப்ரல் 28 அன்று, உலகம் முழுவதும், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பக்கம் வெளியாகவிருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கியது மணிரத்னம். இந்த படத்தின் மூலக்கதை, 'அமரர்' கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்கிற வரலாற்று புதினத்தின் தழுவல். ஐந்து பாகமாக கல்கி எழுதிய கதையை சுருக்கி இரண்டு பாகமாக எடுத்துள்ளார் மணிரத்னம். படத்தின் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி கோடிகளில் லாபம் ஈட்டியது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் மட்டும் பாடல் வெளியீட்டு விழா சென்ற மாதம், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. படத்தின் முக்கிய நடிகர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
PS 2 ப்ரோமோஷன் எப்போது?
எனினும், முதல் பாகத்திற்கு செய்தது போல, இந்தியா முழுவதும் படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக முக்கிய நடிகர்களின் கால்ஷீட்டும் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது விக்ரம், 'தங்கலான்' படத்தின் படைப்பில் உள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் கூற்றின்படி, அந்தத் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் முடிவடையும். 'ஜெயம்' ரவி, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பதாக செய்தி. மறுபுறம் 'குந்தவை' திரிஷா, லியோ படப்பிடிப்பிற்காக சென்னையில் இருக்கிறார். அவரிடம் 15 நாட்கள், ப்ரோமோஷன் வேலைகளுக்கு ஒதுக்க சொல்லி கேட்டுக்கொண்டுள்ளார். கார்த்தி, 'ஜப்பான்' திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகளில் உள்ளார். இவர்கள் அனைவரும், வரும் ஏப்ரல் 16 முதல் ப்ரோமோஷன் வேலைகளை துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.