Page Loader
உடல்ரீதியாக விமர்சிக்கப்படும் திரைப்பட ஹீரோயின்கள்; தொடரும் அவலம்
உடல் எடை காரணமாக விமர்சனங்களை சந்திக்கும் திரைப்பட ஹீரோயின்கள்

உடல்ரீதியாக விமர்சிக்கப்படும் திரைப்பட ஹீரோயின்கள்; தொடரும் அவலம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2023
09:00 am

செய்தி முன்னோட்டம்

சினிமாவில் நீடித்து நிலைப்பதற்கு நடிப்பு திறமையுடன், அழகும், பிட்னெஸ்ஸும் முக்கியமாக கருதப்படுகிறது. அதிலும், தங்கள் கனவுக்கன்னியாக நினைக்கும் ஹீரோயின்கள், எவெர்க்ரீன் அழகுடனும், உடல்வாகுடனும் இருக்க வேண்டும் என நினைப்பது முட்டாள் தனமானது. ஆனாலும், அதை உணராமல், தொடர்ந்து நடிகைகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் கண்டனத்திற்கு உரியது. அப்படி விமர்சனங்களை வைப்பவர்கள், தாங்களும் அவ்வாறு பிட்டாக இருக்கிறார்களா என்பது பெரிய கேள்விக்குறி! சமீபத்தில், நடிகை அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் அனுஷ்கா உடல் பருமனான தோற்றத்தில் இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களது கனவுக்கன்னியின் புகைப்படம் வெளியானதும் பலரும் நேர்மறை விமர்சனங்களை பதிவிட்டனர். ஆனாலும் சிலர், அவர் இன்னமும் பழைய உடல் அமைப்பில் இருப்பதை கிண்டல் செய்தனர்.

ஹீரோயின்கள்

எதிர்மறை விமர்சனங்களை சந்திக்கும் நாயகிகள்

இது போல, நடிகைகளை நோக்கி எதிர்மறை விமர்சனங்கள் வருவது இது முதல்முறை அன்று. அனுஷ்காவின் மீதே 'சைலென்ஸ்' மற்றும் 'பாக்மாதி' படங்களின் போது இதே விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதன் பிறகு நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்ட அனுஷ்கா, உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் அவர் புதிய படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. பாலிவுட் நடிகையான வித்யாபாலன் கூட இதே போன்ற பிரச்னையை சந்தித்தார். அதற்கு பதிலளித்த அவர்,"எனது எடை பிரச்சினை தேசிய பிரச்சினையாக மாறிவிட்டது. நான் எப்போதும் சிறிது குண்டாகதான் இருப்பேன்; விமர்சனங்களை தாண்டி நான் வெகுதூரம் வந்துவிட்டேன்." எனக்கூறினார். நடிகை நயன்தாராவும், தனது முதல்படத்தின் போது, இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்டார்.