கமல்ஹாசனின் மகள்களை கடத்த திட்டமா? மகாநதி படம் உருவாக காரணமாக இருந்த சம்பவம்
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மகாநதி'. இந்த படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவு பெற்ற இந்த தருணத்தில், இந்த திரைப்படம் உருவாக காரணமான ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. 'மகாநதி' படத்தின் கதையும், திரைக்கதையும் கமல்ஹாசன் எழுதியது. சிறந்த திரைப்படத்திற்காகவும், சிறந்த ஒலிப்பதிர்வுக்காகவும் தேசிய விருதுகளை வென்ற இந்த கிளாசிக் திரைப்படம் உருவாவதற்கு காரணம், கமல் வாழ்க்கையில், நிஜத்தில் நடந்த சம்பவம். இந்த திரைப்படத்தில், காவேரி கரையில் பிறந்த ஒருவன், சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தால் ஏமாற்றப்பட்டு, தன்னுடைய இரு பிள்ளைகளும் தொலைத்து, பின்னர் நெடும் போராட்டத்திற்கு பிறகு அவர்களை தேடி கண்டு பிடிப்பான். கூடவே இருந்த நண்பன் ஒருவனை நம்பி ஏமாறியவனின் கதைதான் இது.
கமல் எழுதிய மஹாநதியின் கதை
கமல்ஹாசனுக்கும், சரிகாவிற்கும் பிறந்தவர்கள் ஸ்ருதி ஹாசனும், அக்ஷரா ஹாசனும். இவர்கள் இருவரும் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது, கமல் ஹாசனிடம் உதவியாளராக பணியாற்றிய ஒரு நபர், அவர்களை கடத்தி, பணம் கேட்டு மிரட்ட திட்டமிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தாராம் கமல். இதை பற்றி வெளியே யாரிடமும் கூறவில்லையாம் அவர். ஆனால், மனதிற்குள், ஒரு வேளை தன்னுடைய பிள்ளைகளை யாரேனும் கடத்தினால், அவர்களை கொன்றுவிடும் அளவிற்கு கோவம் இருந்ததாகவும், அப்போது ஒரு படத்திற்கு கதை எழுத வேண்டிய கட்டாயம் இருந்தும் அவரால் ஒரு மாதம் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடிய வில்லையாம். அதன் பிறகு ஒரு கதையை எழுதிய போது, இந்த சம்பவத்தின் தாக்கம் அதில் இருந்ததாம். இதை கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.