சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி! 27 ஆண்டு கால வரலாற்றை முடித்துக் கொள்ளும் ஆஸ்கார் விருது நிகழ்வு
செய்தி முன்னோட்டம்
திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, பல தசாப்தங்களாகத் தனது அடையாளமாக விளங்கிய ஹாலிவுட்டை விட்டு வெளியேற உள்ளது. வரும் 2029 ஆம் ஆண்டு முதல், ஆஸ்கார் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள பீகாக் தியேட்டருக்கு மாற்றப்படும் என்று அகாடமி நேற்று (மார்ச் 26, 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது உலக சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
டால்பி தியேட்டர்
டால்பி தியேட்டருடன் முடிவுக்கு வரும் 27 ஆண்டு கால பந்தம்
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஆஸ்கார் விருது விழா ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அகாடமி அமைப்பே இந்தத் தியேட்டரை ஆஸ்கார் விழாவிற்காகவே பிரத்யேகமாக உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஒரே இடத்தில் ஆஸ்கார் விழா நடைபெற்றது என்றால் அது டால்பி தியேட்டரில்தான். வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 100வது ஆஸ்கர் விருது விழாவுடன், டால்பி தியேட்டரில் ஆஸ்கார் நடத்தும் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு, சுமார் 14.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீகாக் தியேட்டருக்கு விழா இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
புதிய இடம்
புதிய இடம் மற்றும் ஒளிபரப்பு மாற்றங்கள்
ஆஸ்கார் விழாவின் இந்த இடமாற்றம் வெறும் கட்டிட மாற்றத்துடன் நின்றுவிடவில்லை. 2029 ஆம் ஆண்டு முதல் ஆஸ்கார் விழாவின் நேரடி ஒளிபரப்பு உரிமம் ஏபிசி தொலைக்காட்சியிடமிருந்து யூடியூப் தளத்திற்கு மாறுகிறது. இந்த டிஜிட்டல் புரட்சிக்கு ஏற்ப, பீகாக் தியேட்டரை நிர்வகிக்கும் ஏஇஜி நிறுவனத்துடன் அகாடமி 10 ஆண்டு கால ஒப்பந்தம் செய்துள்ளது. கிரிப்டோ டாட் காம் ஏரினா அருகே அமைந்துள்ள பீகாக் தியேட்டரில் ஏற்கனவே எம்மி விருதுகள் மற்றும் ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் போன்ற சர்வதேச நிகழ்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வசதிகள்
வசதிகளும் தொழில்நுட்ப மேம்பாடுகளும்
தற்போது ஆஸ்கார் விழா நடைபெறும் டால்பி தியேட்டரை விட, பீகாக் தியேட்டர் இருமடங்கு பெரியது. டால்பியில் சுமார் 3,400 பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், பீகாக் தியேட்டரில் 7,000 பேர் வரை அமர முடியும். மேலும், டால்பி தியேட்டர் ஒரு வணிக வளாகத்திற்குள் இருப்பது போன்ற உணர்வைத் தரும். ஆனால், பீகாக் தியேட்டர் ஒரு திறந்தவெளி வளாகத்தில் (எல்.ஏ.லைவ் வளாகம்) அமைந்துள்ளதால், சிவப்பு கம்பள வரவேற்பு இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். அகாடமியின் தேவைக்கேற்ப இந்தத் தியேட்டரின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த ஏஇஜி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
வரலாற்றுப் பின்னணி
வரலாற்றுப் பின்னணியும் அகாடமியின் பார்வையும்
ஆஸ்கார் விருதுகள் அதன் ஆரம்ப காலத்தில் பல்வேறு ஹோட்டல்களில் வழங்கப்பட்டன. பின்னர் 1940களில் தியேட்டர்களுக்கு மாறின. 1968 முதல் 1986 வரை டவுன்டவுனில் உள்ள டோரதி சாண்ட்லர் பெவிலியனில் விழா நடைபெற்றது. "101வது ஆஸ்கார் மற்றும் அதற்குப் பிந்தைய விழாக்களுக்கு, எல்.ஏ.லைவ் வளாகம் ஒரு மிகச்சிறந்த பின்னணியாக அமையும்" என்று அகாடமியின் சிஇஓ பில் கிராமர் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் சாலையோர வரலாற்றுத் தியேட்டர்களின் பழமை இதில் இல்லாவிட்டாலும், நவீன காலத்திற்கு ஏற்ப இந்த மாற்றம் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.