LOADING...

"வருஷத்துக்கு 3 கிலோ தங்கம்!": துபாய் வாழ் இந்திய தொழிலதிபர்களின் ஆடம்பர வாழ்க்கையை பேசும் ரியாலிட்டி ஷோ

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2026
04:21 pm

செய்தி முன்னோட்டம்

துபாயில் வாழும் பெரும் பணக்கார இந்தியர்களின் பகட்டான வாழ்க்கையை மையமாக கொண்டு, Netflix 'Desi Bling' என்ற புதிய ரியாலிட்டி ஷோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் டிரைலர் தற்போது இணையத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய வம்சாவளி தொழிலதிபர் சதீஷ் சன்பால் தனது மனைவிக்கு ஆண்டுதோறும் 3 கிலோ தங்கம் பரிசளிப்பதாக வெளியான தகவல் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. இந்தத் தொடரில் சின்னத்திரை நட்சத்திரங்களான கரண் குந்த்ரா மற்றும் தேஜஸ்வி பிரகாஷ் ஆகியோருடன், Danube குழுமத்தின் நிறுவனர் ரிஸ்வான் சாஜன் மற்றும் Anax Holding தலைவர் சதீஷ் சன்பால் போன்ற முன்னணி தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடர் துபாயின் மின்னும் வாழ்க்கை முறை மற்றும் அங்குள்ள இந்தியர்களின் வெற்றி பயணத்தை திரையில் கொண்டு வரவுள்ளது.

மனைவிக்கு பரிசு

சதீஷ் சன்பாலின் தங்க மோகம்

டிரைலரின் மிக முக்கியமான அம்சம், சதீஷ் சன்பாலின் மனைவி தபிந்தா சன்பால் கூறிய தகவல்தான். "சதீஷிற்கு தங்கம் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர் 3 கிலோ தங்கம் வாங்கித் தருவார்," என்று அவர் கூறியுள்ளார். தற்போதைய சந்தை மதிப்பின்படி, 3 கிலோ தங்கத்தின் விலை சுமார் ₹4.5 கோடிக்கும் அதிகமாகும். இந்தியாவின் ஜபல்பூரில் பிறந்த சதீஷ் சன்பால், பல ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ₹80,000 பணத்துடன் துபாய்க்கு சென்றவர்.

விவரம்

யார் இந்த சதீஷ் சன்பால்?

இன்று ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் மற்றும் நிதி சந்தைகளில் கொடிகட்டி பறக்கும் அனாக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராக சதீஷ் சன்பால் உள்ளார். இவர் தனது ஒரு வயது மகளுக்கு 'ரோல்ஸ் ராய்ஸ்' (Rolls Royce) கார் பரிசளித்த செய்தி கடந்த ஆண்டு வைரலானது குறிப்பிடத்தக்கது. சதீஷ் ஒரு இந்து மற்றும் தபிந்தா ஒரு பிரிட்டிஷ்-பாகிஸ்தானி முஸ்லிம் என்பதால், ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு தபிந்தாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், சதீஷ் பெரும் பணக்காரராக உயர்ந்தவுடன், அவர்களின் அணுகுமுறை மாறியதாக தபிந்தா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சதீஷ், "பணம் என்பது கடவுள் அல்ல, ஆனால் அது கடவுளுக்கு குறைவானதும் அல்ல," என்று எதார்த்தமாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement