
பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க நெட்ஃபிலிக்ஸின் திட்டம்.. இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுமா?
செய்தி முன்னோட்டம்
இந்தியா உட்பட பல உலக நாடுகளிலும், ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 கோடி பேர் கட்டணம் செலுத்தாமல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் நெட்ஃபிலிக்ஸ் கணக்கை பயன்படுத்தி வருகின்றனராம்.
இது அந்நிறுவனத்தின் வருவாயையும், வளர்ச்சியையும் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கிறது. எனவே, இதனைத் தடுக்க புதிய திட்டங்களை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்.
ஒரு நெட்ஃபிலிக்ஸ் கணக்கு ஒரு குடும்பத்திற்கு மட்டுமே என்பது அந்நிறுவனத்தின் கொள்கை. எனவே, ஒரே வீட்டில் இருப்பவர்கள் பாஸ்வேர்டைப் பகிர்ந்து ஒரே நெட்பிளிக்ஸ் கணக்கை பகிர்ந்து கொள்வதில் அந்நிறுவனத்துக்குப் பிரச்சினையில்லை. ஆனால், ஒரே குடும்பத்தைச் சேராத பலர் ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை பயன்படுத்தக் கூடாது.
நெட்ஃபிலிக்ஸ்
நெட்ஃபிலிக்ஸின் திட்டம்:
எனவே, இதனைத் தடுக்க ஒரு மாதத்திற்கு ஒரு முறை தங்கள் இருப்பிடத்தை நெட்ஃபிலிக்ஸ் செயலியில் அப்டேட் செய்ய வேண்டும்.
அப்படி ஒரே குடும்பத்தை சாராத வேற்றுநபர் நெட்ஃபிலிக்ஸை பயன்படுத்துகிறார் என்றால், அதற்கு குறிப்பிட்ட அளவு கூடுதல் கட்டணத்தை கட்ட வேண்டும்.
இந்த முறையை நியூசிலாந்து, கனடா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்து பார்த்தது நெட்பிளிக்ஸ். அந்த நாடுகளைத் தொடர்ந்த தற்போது அந்த முறையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
மேலும், பல நாடுகளில் இனி வரும் நாட்களில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இந்த முறையை நெட்ஃபிலிக்ஸ் அறிமுகப்படுத்துமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்தியாவில் வருவாயைப் பெருக்க விளம்பரம்பரங்களுடன் கூடிய நெட்ஃபிலிக்ஸ் சேவையை அந்நிறுவனம் வழங்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.