Page Loader
பத்மஸ்ரீ விருது பெற்ற நடன கலைஞர் மம்தா சங்கருக்கு இப்படியொரு பின்னணியா? முழு விபரம்
பத்மஸ்ரீ விருது பெற்ற நடன கலைஞர் மம்தா சங்கர்

பத்மஸ்ரீ விருது பெற்ற நடன கலைஞர் மம்தா சங்கருக்கு இப்படியொரு பின்னணியா? முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 29, 2025
09:36 am

செய்தி முன்னோட்டம்

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது பட்டியலில் நடன கலைஞர் மம்தா சங்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது. யார் இந்த மம்தா சங்கர்? பிரபல இசை அமைப்பாளர் பண்டிட் ரவிசங்கரின் மருமகளான மம்தா சங்கர் சிறந்த நடன கலைஞர்களான உதய் சங்கர் மற்றும் அமலா சங்கர் ஆகியோரின் மகள் ஆவார். கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த அவரது குழந்தைப் பருவம் நடனம், இசை, நாடகம் ஆகியவற்றில் மூழ்கியது. பெற்றோரின் பாரம்பரியத்தை பெற்ற மம்தா சங்கர், இளம் வயதிலேயே நடனத்தில் அறிமுகமானார். அவர் தனது நடிப்புக்காகவும், நடன திறமைக்காகவும் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

நடிப்பு

நடிப்பில் அசத்திய மம்தா சங்கர்

இந்நிலையில், பிரபல இயக்குனர் மிருணால் சென், மிருகயா என்ற பெங்காலி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் சத்யஜித் ரேயின் கவனத்தை ஈர்த்து ஞானசத்ரு படத்தில் நடித்தார். அப்போதிருந்து, புத்ததேவ் தாஸ்குப்தா, கௌதம் கோஷ் மற்றும் ரிதுபர்னோ கோஷ் போன்ற பிரபல பெங்காலி இயக்குனர்களின் படங்களில் நடிகையாக சிறப்பு அங்கீகாரம் பெற்றார்.

விவரங்கள்

நடன நிறுவனம்

இதற்கிடையில், மம்தா சங்கர் உதயன், மம்தா சங்கர் நடன நிறுவனம் மற்றும் மம்தா சங்கர் பாலே குழுவை நிறுவி, உலகம் முழுவதும் பல நடன நிகழ்ச்சிகளை நடத்தினார். பெங்காலி படங்களில் அதிகம் நடித்துள்ள மம்தா சங்கர், அது தவிர ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமர்ஷியல் படங்களை விட எதார்த்தமான படங்களில் நடித்த மம்தா, பின்னர் நடனத்திற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். தற்போது 70 வயதான மம்தா சங்கர் தனது மகனுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.