Loading...
ஆர்த்தி ரவி தொடர்ந்த அவதூறு வழக்கு: பாடகி கெனிஷா டிசம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பாடகி கெனிஷா டிசம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

ஆர்த்தி ரவி தொடர்ந்த அவதூறு வழக்கு: பாடகி கெனிஷா டிசம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2026
06:35 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா பிரான்சிஸ் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் அவர் நேரில் ஆஜராகத் தவறினால், வழக்கின் விசாரணை ஒருதலைப்பட்சமாக முடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

விவாகரத்து சர்ச்சை

ரவி மோகனின் பொது மன்னிப்பு

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கிடையே, பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனைத் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து ஆர்த்தி ரவி தொடர்ந்த வழக்கில், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக பொதுவெளியில் எவ்விதக் கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது எனக் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

ஆனால், அந்த உத்தரவை மீறி ஊடகங்களைச் சந்தித்ததாக ஆர்த்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ரவி மோகன் பொதுவெளியில் மன்னிப்புக் கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அவதூறு வழக்கு

ரூ.1.01 கோடி நஷ்ட ஈடு கோரிய ஆர்த்தி ரவியின் அவதூறு வழக்கு

இதற்கிடையில், தன்னைப் பற்றி அவதூறாக பேசத் தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி பதிவிடப்பட்ட கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் கோரி பாடகி கெனிஷாவுக்கு எதிராக ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சிகள் பதிவுக்காக விசாரணையை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, வரும் டிசம்பர் 3-ஆம் தேதி கெனிஷா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாஸ்டர் நீதிமன்றம், இது குறித்த பொது அறிவிப்பை நாளிதழ்களில் வெளியிடவும் ஆணையிட்டுள்ளது.

ADVERTISEMENT

மனு

குழந்தைகளைச் சந்திக்கும் அனுமதியை ரத்து செய்ய ஆர்த்தி மனு

மற்றொருபுறம், தனது குழந்தைகளைச் சந்திப்பதற்கு நடிகர் ரவி மோகனுக்கு குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி ஆர்த்தி ரவி புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்படி ரவி மோகன் இடைக்காலப் பராமரிப்புத் தொகையை வழங்கவில்லை என்றும், குழந்தைகளைப் பராமரிப்பதில் அவருக்கு உண்மையான அக்கறை இல்லை என்றும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தனது தோழியுடன் ரவி மோகன் போதை வஸ்து உட்கொள்வது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதை ஆர்த்தி தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய சூழலில் ரவி மோகனிடம் குழந்தைகளை அனுப்புவது அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT