LOADING...
'இரும்புக்கை மாயாவி': சூர்யா, அமீர் கான்-ஐ தொடர்ந்து அல்லு அர்ஜுனிடம் கதை சொன்ன லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜின் 'இரும்புக்கை மாயாவி' திரைப்படத்தில் யார் நடிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது

'இரும்புக்கை மாயாவி': சூர்யா, அமீர் கான்-ஐ தொடர்ந்து அல்லு அர்ஜுனிடம் கதை சொன்ன லோகேஷ் கனகராஜ்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 03, 2025
12:16 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திட்டங்களில் ஒன்றான, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'இரும்புக்கை மாயாவி' திரைப்படத்தில் யார் நடிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இது குறித்து புதிய தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 'கைதி', 'விக்ரம்', 'லியோ' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கடைசியாக ரஜினிகாந்தின் 'கூலி' படத்தை இயக்கி இருந்தார். தொடர்ந்து அவர் ரஜினி- கமல் படத்தை இயக்குவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது 'இரும்புக்கை மாயாவி' திரைப்படத்தின் கதையை கையிலெடுத்துள்ளார்.

விவரங்கள்

சரியான ஹீரோக்காக காத்திருக்கும் 'இரும்புக்கை மாயாவி'

முன்னரே லோகேஷ் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக தயாராகி வருவதாக பல செய்திகள் வெளியானது. இந்த நிலையில் 'இரும்புக்கை மாயாவி' படத்தின் கதையை தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனிடம் விவரித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அல்லு அர்ஜுன் விரைவில் இறுதி முடிவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ திட்டம் ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவை நாயகனாக கொண்டு உருவாக்க திட்டமிடப்பட்டது. பின்னர், இக்கதை பாலிவுட் நடிகர் அமீர் கான் கவனத்துக்கு சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இப்போது 'புஷ்பா' வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுனிடம் கதை விவரிக்கப்பட்டுள்ளது.

பின்னணி

படத்தின் பின்னணியும் கதைச் சுருக்கமும்

'இரும்புக்கை மாயாவி' திரைப்படம் 1962 இல் வெளியான டிசி காமிக்ஸ் நாவலான 'The Steel Claw-ஐ அடிப்படையாகக் கொண்டது. ஒரு விபத்தில் தனது வலது கையை இழந்த ஒரு மனிதனுக்கு இரும்பாலான செயற்கை கை பொருத்தப்படுகிறது. பின்னர், எதிர்பாராத மின் அதிர்ச்சி ஒன்றால், அந்த இரும்புக்கை தவிர அவனது உடல் முழுவதையும் மறைந்து போகச் செய்யும் அதீத சக்தியை அவன் பெறுகிறான். இந்தக் கருவை மையமாகக் கொண்டே இப்படம் உருவாகவுள்ளது. அல்லு அர்ஜுன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால், பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement