ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை வைத்து தனி திரைப்படம்; லோகேஷ் கனகராஜின் தரமான அப்டேட்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கிய விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனித் திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். கமல்ஹாசன் இயக்கத்தில் விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, லோகேஷ் கனகராஜ், "விக்ரமை முடிப்பதற்காகவே ரோலக்ஸ் காட்சியை வைத்தேன். ஆனால், ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால், இப்போது தனி ரோலக்ஸ் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன்." என்று கூறியதாக கூறப்படுகிறது. தனி ரோலக்ஸ் திரைப்படத்தைத் தவிர, லோகேஷ் கனகராஜ் தனது லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) பற்றிய தனது பார்வையையும் வெளிப்படுத்தினார்.
லியோ இரண்டாம் பக்கம் குறித்து லோகேஷ் கருத்து
LCUக்கு சரியான முடிவு தேவை என்று அதில் வலியுறுத்தியுள்ள லோகேஷ் கனகராஜ், "LCU பிரபஞ்சம் தொடங்கியுள்ளதால், அதை சரியாக மூட வேண்டும். எனவே அடுத்த 5 ஆண்டுகளில் வரும் தனது திரைப்படங்கள் LCU பிரபஞ்சத்தின் கீழ் வரும்." என்றார். LCUவில் கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ், லியோவின் இரண்டாம் பாகத்தை வாய்ப்பு கிடைத்தால் எடுப்பேன் என்றும், அதற்கு பார்த்திபன் என்று பெயரிடுவேன் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.