 
                                                                                மீண்டும் வெள்ளி திரைக்கு வரும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா
செய்தி முன்னோட்டம்
வயது மூப்பின் காரணமாக திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார், பழம்பெறும் நடிகை கே.ஆர்.விஜயா. அவர் தற்போது, இயக்குனர் ரவி பார்கவன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'மூத்தகுடி' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு, தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்ற ஆண்டே துவங்கப்பட்ட இந்த படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் தயாரிப்பாளரான,பிரகாஷ் சந்திரா இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். குடும்ப கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில், இயக்குனர்-நடிகர் தருண்கோபி, ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, மற்றும் பலர் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் நாயகியாக புதுமுகம் அன்விஷா நடித்துள்ளார்.
கே.ஆர்.விஜயா
மூத்தகுடி படத்தில் கே.ஆர்.விஜயா
இந்த படத்தில், நடிகை கே. ஆர். விஜயா நடிப்பதை குறித்து பேசிய இயக்குனர், "மூத்த நடிகை கே ஆர் விஜயா அம்மா இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது கேரவனே வேண்டாம் படக்குழுவினருடன் இருக்கிறேன் என்று எப்போதும் படப்பிடிப்பில் தான் இருப்பார். எல்லோருடனும் வெகு இயல்பாக நட்புறவோடு பழகினார். அவரை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்" எனத்தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கோவில்பட்டி, திருநெல்வேலி, சாத்தூர், கயத்தாறு, எட்டையபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நடைபெற்றது எனவும், போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் மேலும் தெரிவித்தன. படத்திற்கு இசை, ஜே.ஆர்.முருகானந்தம். படத்தை குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.