தமிழ் திரையுலகில் பேரிழப்பு! 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா காலமானார்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமா வரலாற்றின் மிக முக்கியமான, செல்வாக்குமிக்க இயக்குனர்களில் ஒருவரான 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா (84) காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (புதன்கிழமை, ஜூன் 10, 2026) அதிகாலை அவர் உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2025-ஆம் ஆண்டு இவரது மகன் மனோஜ் திடீரென காலமானதைத் தொடர்ந்து, பாரதிராஜாவின் உடல்நிலை கடந்த சில மாதங்களாகவே பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவரது திரையுலகப் பயணம் நிறைவடைந்துள்ளது. இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும், உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் இமயம்
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய மகா கலைஞன்
நாடகத் தனமான ஸ்டுடியோ செட்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை, முதன்முதலில் கிராமத்து மண்வாசனைக்கும், எதார்த்தமான மனிதர்களுக்குமிடையே திறந்தவெளிக்கு அழைத்துச் சென்ற பெருமை பாரதிராஜாவையே சேரும். கடந்த 1977-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான '16 வயதினிலே' திரைப்படம் தமிழ் சினிமாவின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது. சப்பனியிடமும், மயில், பரட்டையிடமும் அவர் காட்டிய எதார்த்தம் அதுவரை கோலிவுட் பார்த்திராத ஒன்று. 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்', 'அலைகள் ஓய்வதில்லை', 'முதல் மரியாதை', 'கருத்தம்மா' என இவர் தொட்ட தலைப்புகள் அனைத்தும் தமிழ் சமூகத்தில் பெரும் விவாதங்களையும், புரட்சிகளையும் ஏற்படுத்தின. இவரது அசாத்திய திரைப்பயணத்திற்காக 6 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார்.
இரங்கல்
திரையுலகம் அஞ்சலி
பாரதிராஜாவின் மறைவையடுத்து திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணிக்க உள்ள நிலையில், அதிகாலையிலேயே முதல் ஆளாக நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தி விட்டு புறப்பட்டார். தமிழ் சினிமா உள்ளவரை 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் மண்வாசனைத் திரைப்படங்களும், அவர் அறிமுகப்படுத்திய நவரச நாயகர்களும் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்.