பிரபல மலையாள எழுத்தாளரும், இயக்குனருமான எம்டி வாசுதேவன் நாயர் தனது 91வது வயதில் காலமானார்
மலையாள இலக்கியத்தின் பழம்பெரும் தலைவரான எம்டி வாசுதேவன் நாயர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 91வது வயதில் புதன்கிழமை காலமானார். நாவல்கள், சிறுகதைகள், திரைக்கதைகள், சிறுவர் இலக்கியம் மற்றும் பயணக்கட்டுரைகளில் தலைசிறந்தவர் என்று பிரபலமாக அழைக்கப்படும் எம்டி, நாட்டின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷண் மற்றும் மிக உயர்ந்த இலக்கிய அங்கீகாரமான ஞானபீட விருதை பெற்றார். அவர் கேந்திர சாகித்ய அகாடமி விருது, கேரள சாகித்ய அகாடமி விருது போன்றவற்றையும் பெற்றவர். நாலுகெட்டு, ரண்டமூசம், மஞ்சு, காலம், அசுரவித்து மற்றும் இருட்டின் ஆத்மாவு ஆகியவை அவரது தலைசிறந்த இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. அவை கேரளாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் தெளிவான சித்தரிப்புக்காக கொண்டாடப்படுகின்றன.
மலையாள சினிமாவில் அவரது பங்கு
மலையாள சினிமாவில் காலத்தால் அழியாத உன்னதமான நிர்மால்யம், இரண்டு ஆவணப்படங்களுடன் சேர்த்து ஆறு படங்களை இயக்கியுள்ளார். இவரது திரைக்கதைகள் நான்கு தேசிய விருதுகளையும் 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளன. கூடுதலாக, எம்டி மூன்று முறை கேரளாவின் சிறந்த திரைப்பட இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்டியின் மறைவிற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் இரங்கல்கள் குவிந்தன. கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த மரணம் மாநிலத்துக்கும், குறிப்பாக மலையாள இலக்கியத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில் கேரள அரசு டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கவுள்ளது.