25வது ஆண்டில் மாஸ் கூட்டணி: மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் கார்த்தி!
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, பிரபல இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சிரஞ்சீவி நடித்த 'காட்ஃபாதர்' திரைப்படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து மோகன் ராஜா மீண்டும் இயக்கும் படம் என்பதாலும், இவர்கள் இருவரும் முதன்முறையாக இணைவதாலும் இந்த திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லட்சுமணன் குமார் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாக்கப்பட உள்ளது. இப்படத்தின் கூடுதல் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா பயணம்
மோகன் ராஜாவின் 25 ஆண்டு கால சினிமா பயணம்
தனது திரையுலகப் பயணத்தின் 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு இது 11வது திரைப்படமாகும்.
இது குறித்து சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அவர், கார்த்தியுடன் இணைவது தனது திரை பயணத்தில் ஒரு சிறப்புமிக்க மைல்கல் என்றும், எப்போதும் ஆதரவு அளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தியும் இக்கூட்டணி குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
நடிகர் கார்த்தி தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'சர்தார் 2' திரைப்படம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி திரைக்கு வரத் தயாராக உள்ளது.
தவிர, 'மார்ஷல்' மற்றும் கல்யாண் சங்கர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திலும் அவர் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.