'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு ஆதரவு தெரிவித்த குஷ்புவிற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர்
பிரபல தமிழ் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, எப்போதுமே வெளிப்படையாக கருத்துகளை எடுத்துரைப்பதுண்டு. அது சில நேரங்களில் பாராட்டுகளை பெற்றாலும், பல நேரங்களில் சர்ச்சையாவதும் உண்டு. அப்படி தற்போது வெளியான 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் குறித்து அவர் தெரிவித்த கருத்து ஒன்று அரசியல் களத்தில் சர்ச்சையை ஈர்த்துள்ளது. 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே நாடு முழுவதும் அதை பற்றி பலவிதமான செய்திகள் வெளியாகின. சில மாநிலங்களில் உளவு துறை எச்சரிக்கையும் விடப்பட்டது. இந்த திரைப்படம், சென்ற வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், நாடு முழுவதும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அந்தத் படத்திற்கு தடை போடப்பட்டது.
ஆதரவு தெரிவித்த குஷ்புவிற்கு,வலுக்கும் கண்டனங்கள்
பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் இந்த படம் வெளியிட கண்டனங்கள் வலுத்த நிலையில், இந்த படம் குறித்து நடிகை குஷ்பு ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில்,""தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துகிறவர்கள், எதைக் கண்டு பயப்படுகின்றனர் என்று தெரிய வில்லை. எதைப் பார்க்க வேண்டும் என்பதில் மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், நீங்கள் மற்றவர் களுக்காக தீர்மானிக்க முடியாது" என்றார். அதை பார்த்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், "அப்படியென்றால் அமீர்கானின் பி.கே., ஷாருக்கானின் பதான், பஜ்ராவ் மஸ்தானி படங்களுக்கு எதிராக எதற்காக போராட்டங்கள்?" என பதில் கேள்வி எழுப்பினார்.