காந்தாரா 2 -இன் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கப்பட்டு, அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தகவல்
காந்தாரா 2-வின் முதற்கட்ட படப்பிடிப்பிற்கு, அப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி தயாராகி வருவதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் ஹோம்பலே பிலிம்ஸின் விஜய் கிர்கந்தூர் தெரிவித்துள்ளார். 'Deadline' எனப்படும் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், அவர் இதை குறிப்பிட்டுள்ளார். கதையின் ஒரு பகுதிக்கு, மழை காலம் தேவைப்படுவதால், வரும் ஜூன் மாதம், முதற்கட்ட ஷூட்டிங் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். மேலும், காந்தாரா முதல் பகுதி நாடெங்கிலும் பெற்ற வரவேற்பை தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகத்தை இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காந்தாராவின் முன்கதையாக உருவாக போகும் காந்தாரா 2
காந்தாரா 2-இல், கிராம மக்கள், அவர்களின் தெய்வம் மற்றும் பிரச்சனையில் இருக்கும் ராஜா, ஆகியோரை பற்றிய முன்கதையாக இருக்கும் என்று விஜய் மேலும் தெரிவித்தார். தற்போது, இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் உள்ள காடுகளுக்குச் சென்று, தனது கந்தாரா 2 படத்தில் இடம்பெறப்போகும் நாட்டுப்புறக் கதைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்காக சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இரண்டாம் பாகத்திற்கான பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின், திரைப்பட நடை, கதை மற்றும் ஒளிப்பதிவு கந்தாராவைப் போலவே இருக்கும் எனவும், மேலும் சில பெரிய நடிகர்கள் இணையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் சம்பளமும் தற்போது உயர்த்தப்படலாம் என்றும், ரிஷப் ஷெட்டியின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.