பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மயங்கி விழுந்த கன்னட நடிகர் தர்ஷன்
கன்னட நடிகரும், ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான தர்ஷன் தூகுதீபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல கன்னட நடிகர் மயங்கி விழுந்ததில் காயமடைந்தார் எனவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஊடக தகவல்களின்படி, சிறையில் தர்ஷனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் ஏற்கனவே கவலைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், அவர் குணமடைந்து வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் சிறை அதிகாரிகள் பின்னர் தெளிவுபடுத்தினர்.
நடிகர் சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னணி: ஒரு பார்வை
நடிகர் தர்ஷன், தனது நெருங்கிய தோழியான பவித்ரா கவுடாவுடன் இணைந்து, ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். 'இவர்கள் இருவரும், மேலும் 10 பேருடன், ரேணுகா ஸ்வாமி என்ற நபரின் கொலையில் தொடர்புடையவர்கள்' என விசாரணை செய்த கர்நாடக காவல்துறை தெரிவிக்கிறது. ரேணுகா ஸ்வாமியின் கொலையை தர்ஷனின் அறிவுறுத்தலின் பேரில் செய்ததாக கொலையாளிகள் ஒப்புக்கொண்ட பின்னர் இந்த சம்பவம் கர்நாடகத்தை உலுக்கியது. கடந்த ஜூன் 9 காமக்ஷிபாளையாவில் உள்ள வாய்க்காலில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது தான் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.