கங்குவா ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு; நடிகர் சூர்யா அறிவிப்பு
ரஜினிகாந்தின் வேட்டையனுக்கு போட்டியாக கங்குவா களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த திரைப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் குறித்து முதலில் 2019இல் அறிவிப்பு வந்தது. ஆனால், கொரோனா காரணமாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம், பின்னர் 2022இல் மீண்டும் தொடங்கப்பட்டது. மிகப்பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 1,000 ஆண்டுக்கு முந்தைய வரலாறை அடிப்படையாகக் கொண்டு, எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதற்கட்டமாக 10 மொழிகளில் வெளியாகும் இந்த படம், பின்னர் 38 மொழிகள் வரை மொழியாக்கம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மெய்யழகன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவிப்பு
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள மெய்யழகன் படத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா கோவையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபோது பேசிய சூர்யா, "நான் பிறக்கும்போதே சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக ரஜினிகாந்த் திகழ்கிறார். அதனால் அவரது வேட்டையன் படம் வெளியாவதே சரியாக இருக்கும். கங்குவா ஒரு குழந்தை. அந்த குழந்தை வெளியாகும் நாளே அதன் பிறந்தநாள். அந்த தினத்தை நீங்கள் பண்டிகையாக கொண்டாடுவீங்கன்னு நம்புறேன்." என்றார். மேலும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், படம் அக்டோபர் 10 அன்று வெளியாகாது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.