தொழில்நுட்பம் மீதான தீராத காதல்; ஏஐ குறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்றார் கமல்ஹாசன்
69 வயதானாலும், மூத்த நடிகர் கமல்ஹாசனுக்கு முன்னேறி வரும் தொழில்நுட்பத்தின் மீதான காதலும் அதைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் சிறிதளவும் குறையவில்லை. இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, கமல்ஹாசன் ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்து படிப்பதற்காக அமெரிக்காவிற்கு பறந்துள்ளார். ஏஐ தொடர்பான 90 நாள் படிப்பை தொடங்குவதற்காக கமல்ஹாசன் கடந்த வார இறுதியில் அமெரிக்கா சென்றதாக அந்த அறிக்கை கூறுகிறது. இருப்பினும், அவர் 45 நாட்களுக்கு மட்டுமே படிப்பில் கலந்துகொள்வார், பின்னர் தனது பணி கடமைகளை முடிப்பதற்காக இந்தியா திரும்புவார். கமல் தனது எதிர்கால திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இதை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அனில் கபூரின் ஏஐ சாதனை
முன்னதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6), பாலிவுட் நடிகர் அனில் கபூர் டைம் இதழின் ஏஐ துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனில் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பத்திரிகை அட்டையை வெளியிட்டு, "மிகப்பெரிய நன்றியுடனும் பணிவான இதயத்துடனும், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொலைநோக்கு பார்வையாளர்களில் நான் என்னைக் காண்கிறேன். டைம் இதழின் இந்த அங்கீகாரம் ஒரு மரியாதை மட்டுமல்ல, புதுமை மற்றும் படைப்பாற்றலின் பயணத்தின் பிரதிபலிப்பின் தருணம். இந்த முயற்சியை அங்கீகரித்ததற்கு டைம் இதழுக்கு நன்றி!" எனக் கூறியிருந்தார். அனிலுடன், ஹாலிவுட் நடிகரான ஸ்கார்லெட் ஜோஹன்சனும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.