சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்?
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இணையும் இந்தப் படம், இவர்கள் இணைந்து பணியாற்றும் முதல் முழு நீளத் திரைப்படமாகும். முன்னதாக, வெங்கட் பிரபு இயக்கிய 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) படத்தில் சிவகார்த்திகேயன் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. அந்த படத்தில் விஜய் கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் புதிய படத்தில் இரண்டு முக்கிய பெண் கதாபாத்திரங்கள் இருப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்திற்காக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் மற்றொரு கதாபாத்திரத்திற்காக காயத்ரி ஷங்கர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விவரங்கள்
VP -SK படத்தை பற்றிய விவரங்கள்
'மாநாடு' மற்றும் 'GOAT' போன்ற தனித்துவமான கதைக்களங்களுக்குப் பிறகு, வெங்கட் பிரபுவின் இந்தப் படம் மீண்டும் ஒரு 'காலப்பயணம்' (Time-Travel) பாணியில் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மாநாடு படமும் டைம் ட்ராவல் பற்றி பேசியது. VP மற்றும் SK இணையவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் 2025-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இதற்கு முன் 2019-ல் வெளியான 'ஹீரோ' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சிலம்பரசன் நடித்த 'மாநாடு' திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'லோகா' வெற்றிக்கு பின்னர் கல்யாணி ப்ரியதர்ஷன் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் கவனம் செலுத்துகிறார்.