தில் சே பட வாய்ப்பு நழுவிய பின் கண்கலங்கிய கஜோல்: மனம் திறந்த இயக்குனர் கரண் ஜோஹர்
இயக்குனர் மணிரத்தினத்தின் தில் சே பட வாய்ப்பை நழுவ விட்ட பின், பாலிவுட் நடிகை கஜோல் கண்கலங்கியதாக, இயக்குனர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார். கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடில், நடிகைகள் கஜோல் மற்றும் ராணி முகர்ஜி பங்கேற்க உள்ளனர். எபிசோடின் போது, கரண், கஜோலின் சில படங்கள் குறித்து பேச உள்ளார். கஜோல் தான் நடிக்க தவறிய படங்களை குறித்து கரண் இடம் பேசுவார் என கூறப்படுகிறது. அதில் தில் சே திரைப்படமும் அடங்கும். தில் சே படத்தில் நடிக்க மணிரத்தினம் கஜோலை தொலைபேசியில் அழைத்ததாகவும், கஜோல் அதை யாரோ கிண்டல் செய்கிறார்கள் என நினைத்து தவிர்த்ததாகவும் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
மணிரத்தினத்தின் அழைப்பை 'பிராங்க்' என நினைத்த கஜோல்
மணிரத்தினம், தில் சே படத்தில் நடிக்க கஜோலை அணுகினார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும் கஜோல் தில் சே திரைப்படத்திற்கு பதில், குச் குச் ஹோதா ஹை திரைப்படத்தை தேர்வு செய்தார். கஜோல் இதுவரை அவரின் தேர்வு குறித்து பேசாத நிலையில், குச் குச் ஹோதா ஹை திரைப்படத்தின் இயக்குனரான கரண் ஜோஹர் சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார். "அந்த நேரத்தில், உங்களுக்கு மணிரத்னத்திடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, எனக்கு நினைவிருக்கிறது." "அவர் நான் மணிரத்னம் பேசுகிறேன் என்று சொன்னார், நீங்கள் 'ஆமாம், நான் டாம் குரூஸ்' என்று சொல்லிவிட்டு போனை வைத்தீர்கள்." "தில் சேக்காக மணிரத்னம் அழைத்திருந்தார். அது மணிரத்னம் என்று நீங்கள் நம்பவில்லை" என கரண் பகிர்ந்து கொண்டார்.