கட்டண சேவையாகும் Jio Cinema: இனி இலவசம் இல்லை
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் ஆகிய விளையாட்டுத் தொடர்களை இலவசமாக இந்திய பயனர்களுக்கு அளித்து, தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது ஜியோ சினிமா தளம். தற்போது வரை அந்தத் தளத்தில் இருக்கும் உள்ளடக்கங்களை பயனர்கள் காண்பதற்கு எந்த விதமான கட்டணங்களும் விதிக்கப்படவில்லை. ஆனால், இந்த ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ஜியோ சினிமாவை கட்டண சேவைத் தளமாக மாற்ற திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் மீடியா & கன்டென்ட் பிஸ்னஸ் தலைவர் ஜோதி தேஷ்பாண்டே. இந்த ஐபிஎல் தொடர் முடிவடைவதற்குள்ளாகவே, ஜியே சினிமா தளத்தில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
என்ன திட்டம் வைத்திருக்கிறது ஜியோ:
தற்போது ஐபிஎல் தொடருக்காக தங்கள் தளத்தை பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் வாடிக்கையாளர்களை, அதன் பிறகும் தங்கள் வசம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ஜியோ சினிமா. இந்தியாவில் முன்னணியில் இருந்து வரும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களுக்குப் போட்டியாக தங்களை நிலைநிறுத்த திட்டமிட்டு வருகிறது ஜயோ சினிமா. மேலும், இந்தியாவில் இயங்கி வரும் ஓடிடி தளங்களில் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது. அதனைக் குறைக்கும் வகையில் தங்கள் தளத்தில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண சேவை தான் என்றாலும், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் குறைவான கட்டணத்தையே நிர்ணயிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இந்த காலவரிசையைப் பகிரவும்