ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'
கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து இயக்கி சமீபத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. திரை துறையை சார்ந்த பலரும் இப்படத்தை பாராட்டிய நிலையில், இந்த திரைப்படம் ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் அடிநாதமே 'நீங்கள் கலையை தேர்வு செய்யவில்லை. கலை உங்களை தேர்வு செய்கிறது' என்பது தான். ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டச்சு பிரீமியருக்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' லைம்லைட் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்தக் கருத்தை சிறப்பாக பிரதிபலிக்கிறது. ஒரு நல்ல சினிமா என்பது மொழி மற்றும் நிலத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று," என்றார்.
கார்த்திக் சுப்புராஜ் பதிவு
சர்வதேச திரைப்படவிழாவிற்கு தொடர்ந்து தேர்வாகும் தமிழ் படங்கள்
முன்னதாக இதே திரைப்படவிழாவில், சூரி நடிப்பில் உருவான ஏழு கடல் ஏழு மலை திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது பற்றி படக்குழு வெளியிட்ட அறிக்கையில், "எங்களின் மதிப்புமிக்க முயற்சியும், இயக்குனர் ராமின் இணையற்ற படைப்பும் #YezhuKadalYezhuMalai, மதிப்பிற்குரிய சர்வதேச திரைப்பட விழா ராட்டர்டாமில் பிக் ஸ்கிரீன் போட்டி பிரிவின் கீழ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது." அதேபோல பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கொட்டுகாளி திரைப்படமும் தேர்வானது. இப்படத்திலும் சூரி தான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது