ஜவான் திரைப்படத்தில் தேர்தல் பற்றி இடம்பெற்ற வசனம் பற்றி மனம் திறந்த இயக்குனர் அட்லி
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மெகா ஹிட் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் அட்லி, விவசாயிகள் தற்கொலை, சுகாதார அமைப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசியிருந்தார். ஆசாத் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷாருக்கான் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசியிருந்த வசனங்கள் வைரலானது. மேலும் ஷாருக்கான் பேசிய வசனங்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்பதாகவும் இருந்தது. சமீபத்தில் 'இந்தியா டுடே' நடத்திய நிகழ்ச்சியில் அட்லி பங்கேற்று இருந்தார். அந்நிகழ்ச்சியில் ஜவான் திரைப்படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ஜவான் வசனங்கள் அதிகாரத்தை நோக்கிய குரல் அல்ல
அந்நிகழ்ச்சியில், அதிகாரத்துக்கு எதிராக ஷாருக்கான் பேசிய வசனங்கள் குறித்து அட்லீயிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், "ஜவான் திரைப்படத்தின் வசனங்கள், அதிகாரத்திற்கு எதிரான வசனங்கள் அல்ல". "நான் என் உணர்ச்சிகளை தான் வெளிப்படுத்தினேன். நான் இந்த சமுதாயத்தின் ஓர் அங்கம்". "இது ஒரு சராசரி மனிதனின் குரல். இது ஒவ்வொரு இந்தியரின் உணர்ச்சி. நான் எதையும் குறிப்பிட்டு சொல்லாமல், உண்மையான பிரச்சினைகளை பேசி உள்ளேன்". "ஒருவருக்கு, யாருக்கு, எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். நான் வாக்களிப்பதின் பொறுப்பை குறித்து விவரித்துள்ளேன்" "ஒரு பயிற்சியாளர், மாணவனுக்கு கோல் அடிக்க கற்றுக் கொடுத்தால், அது போட்டிக்கானது மட்டுமல்ல, வாழ்க்கைக்கு ஆனதும் கூட" "எனது கருத்துக்கள் வாழ்க்கைக்கானது" என அவர் பதில் அளித்தார்.