LOADING...
'ஜனநாயகன்' ரிலீஸ்க்கு கிட்டத்தட்ட கிரீன் சிக்னல்! நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்; அடுத்து என்ன?
'ஜனநாயகன்' ரிலீஸ் தொடர்பாக நிலவி வந்த அனைத்து சட்டப் போராட்டங்களும் முடிவுக்கு வந்துள்ளன

'ஜனநாயகன்' ரிலீஸ்க்கு கிட்டத்தட்ட கிரீன் சிக்னல்! நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்; அடுத்து என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 10, 2026
10:51 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தொடர்பாக நிலவி வந்த அனைத்து சட்டப் போராட்டங்களும் முடிவுக்கு வந்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) வாபஸ் பெற்றுள்ளது. மத்திய தணிக்கை வாரியம் (CBFC) படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கூடுதல் நிபந்தனைகளை விதித்ததை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளத் தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோரியது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவைத் திரும்பப் பெற அனுமதி அளித்தார்.

அடுத்த கட்டம்:

படக்குழுவின் அடுத்த கட்டம்?

வழக்கு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கான பணிகளைச் சென்சார் போர்டு மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்படி, படம் தற்போது மறுபரிசீலனை குழுவின் (Revising Committee) பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தக் குழு படத்தை பார்த்துவிட்டு, பொதுமக்களின் பார்வைக்கு 'U', 'U/A' அல்லது 'A' ஆகியவற்றில் எந்தச் சான்றிதழ் வழங்கலாம் என்பதை முடிவு செய்யும். ஏற்கனவே தணிக்கைக் குழு பரிந்துரைத்த சில மாற்றங்களை செய்ய படக்குழு சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது. சட்டச் சிக்கல்கள் அனைத்தும் நீங்கியுள்ளதால், திட்டமிட்டபடி பிப்ரவரி 20-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவே 'ஜனநாயகன்' திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement