ஜெயிலர் vs ஜெயிலர்; ஒரே தலைப்பில், ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். படத்தின் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இந்த வார இறுதியில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெறவுள்ளது. ரஜினியின் ரசிகர்கள், ஆகஸ்ட் 10ஆம் தேதியை ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த நேரத்தில், அதே தலைப்பில், அதே நாளில் மற்றொரு படம் வெளியாகவுள்ளது. மலையாளத்தில், சாக்கீர் மடத்தில் என்பவர் இயக்கியுள்ள திரைப்படத்தின் பெயரும் 'ஜெயிலர்'. அவரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தான் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த குழப்பத்திற்கு விடை காண, தற்போது கோர்ட் படியை எறியுள்ளது சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம்.
யார் முதலில் பதிவு செய்தது?
மலையாள 'ஜெயிலர்' படத்தின் இயக்குனர் சாக்கீர் மடத்தில், தான் முதலில் டைட்டிலை பதிவு செய்ததாக கூறுகிறார். அவரின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில், தமிழ் 'ஜெயிலர்' திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கேரள திரைப்பட வர்த்தக சபை (KFCC) பெஞ்சில் தலைப்பை பதிவு செய்ததாக கூறுகிறார். இருவரும் பாதிக்கப்படாத வகையில் படத்தின் தலைப்பை மாற்றி, டப்பிங் செய்து, மலையாளத்தில் வெளியிடுமாறு சன் பிக்ச்சர்ஸிடம் கேட்டுக் கொண்டதாகவும் சாக்கீர் மடத்தில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம், அந்த கோரிக்கையை மறுத்து, அதே தலைப்பில் முன்னோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. தமிழ் 'ஜெயிலர்' திரைப்படத்தின் கதை, தங்கள் தலைவரை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சிக்கும் கும்பலை எப்படி 'ஜெயிலர்' ரஜினி தடுக்கிறார் என்பதுதான் எனக்கூறப்படுகிறது .