ஐசிசி, டிஸ்னி ஸ்டார், ஜீ, சோனி.. கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்திற்கான சிக்கல்!
ஐசிசி தொடர்களை 2024-2027 வரை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமங்களுக்கான ஏலத்தில் U19 மற்றும் ஆடவர் கிரிக்கெட் தொடர்களுக்கான டிஜிட்டல் உரிமத்தை தக்க வைத்துக் கொண்டது டிஸ்னி ஸ்டார். மேலும், ஐசிசியின் மகளிர் கிரிக்கெட் தொடர்களின் இந்திய டிஜிட்டல் மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தையும் முழுவதுமாகக் கைப்பற்றியிருக்கிறது அந்நிறுவனம். 3.04 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த உரிமத்தை ஜீ குழுமத்துடனும் பகிர்ந்து கொள்வதாகவும் கடந்த ஆண்டே அறிவித்திருந்தது டிஸ்னி ஸ்டார். மொத்த தொகையையும் தாங்களே கொடுக்க முடியாதது கூட காரணமாக இருக்கலாம். ஜீ குழுமமோ சோனியுடன் இணைவதாக 2021-ம் ஆண்டே அறிவித்திருந்தது. இந்த இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு பல கட்டங்களுக்குப் பிறகு கடந்தாண்டு அனுமதியளித்தது இந்தியாவின் CCI அமைப்பு.
ஒளிபரப்பு உரிமத்தை செலுத்துவதில் பிரச்சினை:
மேற்கூறிய ஜீ-சோனி இணைப்பு நடைபெற்றால் மட்டுமே, டிஸ்னி ஸ்டார் பகர்ந்து கொண்ட ஒளிபரப்பு உரிமத்திற்கான தொகையை ஜீ நிறுவனத்தால் செலுத்த முடியும். ஜீ நிறுவனம் நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை பகிர்ந்து கொள்ள கூட்டணி அமைத்தால் மட்டுமே ஐசிசிக்கு முழுமையன தொகையை டிஸ்னி ஸ்டாரால் செலுத்த முடியும். ஆனால், ஜீ-சோனி நிறுவனங்களின் இணைப்பு தற்போது இழுபறியிலேயே இருக்கிறது. அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஐசிசிக்கு உரிமங்களுக்கான தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது டிஸ்னி ஸ்டார். தற்போதைக்கு ஐசிசி மற்றும் டிஸ்னி ஸ்டார் இடையே ஒளிபரப்பு உரிமத்திற்கான ஒப்பந்தமும், டிஸ்னி ஸ்டார் மற்றும் ஜீ ஆகிய நிறுவனங்கள் ஒளிபரப்பு உரிமத்தை பகிர்ந்து கொள்வதற்காக வெளியிடப்பட்ட அறிக்கை மட்டுமே இருக்கிறது.