சமூக ஊடகங்களில் இளையராஜா பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்த இடைக்காலத் தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்த, யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, அனுமதி இல்லாமல் தனது புகைப்படங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், இளையராஜா தன்னை அடையாளப்படுத்தும் விதமாக உள்ள புகைப்படம், பெயர், 'இசைஞானி' என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் தனது அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்குமாறும், அதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறும் அவர் கோரியிருந்தார்.
வணிகம்
வணிக ரீதியான பாதிப்பு
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், புகைப்படங்களை மார்ஃபிங் செய்தும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் வருவாய் ஈட்டப்படுவதாகக் குற்றம் சாட்டினர். சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மற்றும் ரீல்ஸ்கள் மூலம் அனுமதி இல்லாமல் இளையராஜா புகைப்படம் பயன்படுத்தப்படுவது, அவரது தனிப்பட்ட உரிமையைப் பாதிப்பதுடன், சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுவதாகக் கூறப்பட்டது. இளையராஜாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.