LOADING...
பதிப்புரிமை மீறல்; குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பதிப்புரிமை மீறல்; குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 05, 2025
04:05 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தப் படத்தில் தன்னுடைய பாடல்களை, உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, ₹5 கோடி இழப்பீடு கோரி அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தனது பாடல்களைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளையராஜா சார்பில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு, பாடல்களைப் பயன்படுத்த சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் பதிலளித்திருந்தது. ஆனால், அந்த உரிமையாளர் யார் என்பதைப் பற்றி அவர்கள் தெரிவிக்கவில்லை என்று இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பதிப்புரிமை

பதிப்புரிமை மீறல்

இந்தச் செயல் பதிப்புரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும், தனது பாடல்களைப் பயன்படுத்த, தனது அனுமதியை பெறாதது சட்டவிரோதமானது என்றும் இளையராஜா தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். இளையராஜா சார்பில், வழக்கறிஞர்கள் கே. தியாகராஜன் மற்றும் ஏ. சரவணன் ஆகியோர் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, செப்டம்பர் 8 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு தமிழ்த் திரையுலகில் பதிப்புரிமை தொடர்பான விவாதங்களை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த படம் மட்டுமல்லாது ஏற்கனவே சில படங்களிலும் தனது பாடல்களை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தி வந்ததாக இளையராஜா நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.