"தர்மம் அழிந்தால்.. பரசு எழும்புவார்!" மகா அவதார் பரசுராம் திரைப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்ட ஹோம்பலே ஃபிலிம்ஸ்
செய்தி முன்னோட்டம்
கேஜிஎஃப், காந்தாரா மற்றும் சலார் போன்ற பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ், மீண்டும் ஒரு புதிய முயற்சியாக மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அடுத்த கட்டத்தை அறிவித்துள்ளது. பரசுராம் ஜெயந்தியான இன்று (ஏப்ரல் 19), இந்த யுனிவர்ஸின் இரண்டாவது பாகமான மகா அவதார் பரசுராம் திரைப்படத்தின் முதல் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அஷ்வின் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த அனிமேஷன் திரைப்படம், இந்தியப் புராணக்கதைகளின் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போஸ்டர்
அதிரடியான முதல் போஸ்டர் மற்றும் டேக்லைன்
மகா அவதார் பரசுராம் படத்தின் முதல் போஸ்டர், போர்க்களத்தின் நடுவே ரத்தக் கறையுடன் கூடிய கோடரியைத் ஏந்தியிருக்கும் பரசுராமரின் உக்கிரமான தோற்றத்தைக் காட்டுகிறது. "WHEN DHARMA FALLS, THE PARSHU RISES" (தர்மம் அழியும் போது, பரசு எழும்புவார்) என்ற முழக்கத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம், டிசம்பர் 2027ல் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தொலைநோக்குப் பார்வை
மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் தொலைநோக்கு பார்வை
ஹோம்பலே ஃபிலிம்ஸ் மற்றும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த அனிமேஷன் பிரான்சைஸ், விஷ்ணுவின் பத்து அவதாரங்களை மையமாகக் கொண்ட 7 படங்களைக் கொண்ட திட்டமாகும். 2025ல் வெளியான மகா அவதார் நரசிம்மா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இந்தத் தொடரின் அடுத்த பாகமாக மகா அவதார் பரசுராம் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முழுமையான கால அட்டவணை இதோ: மகா அவதார் நரசிம்மா (2025) மகா அவதார் பரசுராம் (2027) மகாவதார் ரகுநந்தன் (ராமன் 2029) மகா அவதார் துவாரகாதிஷ் (கிருஷ்ணர் 2031) மகா அவதார் கோகுலானந்தா (கிருஷ்ணர் 2033) மகா அவதார் கல்கி (முதல் பாகம் 2035) மகா அவதார் கல்கி (இரண்டாம் பாகம் 2037)
வைரல்
இணையத்தில் வைரலாகும் அறிவிப்பு
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, யூடியூப்பில் வெளியிடப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டர் 1.4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. சமூக வலைதளங்களில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களையும், நூற்றுக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ள இந்த அறிவிப்பு, இந்திய அனிமேஷன் துறையில் இந்தப் படம் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. சர்வதேசத் தரத்திலான விசுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் இசை (இசை: சாம் சி.எஸ்) மூலம், இந்தப் படம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருதரப்பினரையும் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.