தியேட்டரில் ₹51 கோடி வசூல்: ஓடிடிக்கு வரும் மீசைய முறுக்கு 2: அதிகாரப்பூர்வ தேதி இதோ
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கி இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்து வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்ற இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாதனை
பாக்ஸ் ஆபிஸில் ₹51 கோடி வசூல்
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் அதிகாரப்பூர்வ தொடர்ச்சியாக உருவான இப்படத்தை நடிகை குஷ்புவின் அவ்னி மூவீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் உலகளவில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துக்களைப் பெற்ற போதிலும், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ₹51 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்தது.
குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற ஆரா 10/10 உள்ளிட்ட துள்ளலான பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது படத்திற்குப் கூடுதல் பலமாக அமைந்தது.
கதை களம்
நட்சத்திரப் பட்டாளம்
இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து கேத்திகா ஷர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர் மாஸ்டர், கருணாஸ், யோகி பாபு, நாசர், பகவதி, விஜய் வரதராஜ் மற்றும் யூடியூபர் ஹர்ஷத் கான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசைத்துறையில் நிலவும் ஆதிக்கப் புறக்கணிப்புகளை எதிர்த்து நின்று, மண்ணின் பாரம்பரிய கானா இசைக்கு உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவதற்காக மூன்று தலைமுறை இசைக் கலைஞர்கள் முன்னெடுக்கும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை ஆதி இயக்கியுள்ளார்.
திரையரங்குகளை தொடர்ந்து தற்போது சோனி லைவ் தளத்தில் நவம்பர் 6 முதல் வெளியாகவுள்ளதால், ஓடிடி தளத்திலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.