ஹாப்பி பர்த்டே GVM! மீண்டும் மீண்டும் காதலில் விழவைத்த இயக்குனரின் பிறந்த நாள் இன்று!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் GVM- கவுதம் வாசுதேவ் மேனனின் பிறந்த நாள் இன்று. இவர் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் மட்டுமல்ல, தற்போது, தென்னிந்தியாவின் அதிகம் தேடப்படும் நடிகரும் கூட! கவுதம் வாசுதேவ்மேனன், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்து, அனைவராலும் GVM என அழைக்கப்படுபவர். இவரது படங்களில் காதல் கொஞ்சி விளையாடும். அதே நேரத்தில் திரில்லர் படங்களில் ரத்தம் தெறிக்கும். சென்னை அண்ணா நகரில் பிறந்து வளர்ந்த கவுதம் மேனன், MCC பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், மூகாம்பிகை கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்து, ராஜிவ் மேனனிடம் அசிஸ்டண்டாக இணைந்தார். தனது திரைப்பயணத்தை அங்கே இருந்து தான் துவங்கினார் எனலாம்.
கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் தரும் GVM -இன் படங்கள்
காதலும், உணர்வுகளும், இழையோடும் இவர் படங்களில், மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் இன்றளவும் பல காதல் கதைகளுக்கு ரெபரென்ஸாக மாறியுள்ளது. படத்தின் பாடல்களும் எவெர்க்ரீன் ஹிட். மாதவன், சிம்பு, சூர்யா போன்ற நடிகர்களின் திரை பயணத்தில், GVM படங்கள் ஒரு திருப்பு முனை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ரொமான்டிக் படங்கள் மட்டுமே எடுப்பார் என்ற பெயரை முறியடிக்கும் விதமாக அவர் தந்ததுதான் வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, என்னை அறிந்தால் போன்ற படங்கள். தயாரிப்பாளராகவும் அவர் ஜெயித்த படம் தங்கமீன்கள். பின்னர் நடிகர் அவதாரம் எடுத்தவர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ர தாண்டவம் என தொடங்கி, தற்போது லியோ படத்தில் முக்கிய வில்லனாக இணைந்துள்ளார்.