
குட் பேட் அக்லியால் லாபமா நஷ்டமா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்; இளையராஜா விவகாரம் தொடர்பாகவும் கருத்து
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் தொடர்பான வசூல் நிலவரங்கள் மற்றும் இளையராஜாவின் பாடல்கள் உபயோகிக்கப்பட்ட விவகாரம் குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தயாரிப்பாளர் ரவி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், படம் தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வசூல் சாதனையாக அமைந்தது என்றும், அதில் பெரிய லாபமோ அல்லது நஷ்டமோ இல்லை என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து மேலும் பல படங்களில் பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும், படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இசையமைப்பாளருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்தும் ரவி பேசினார்.
சோனி
சோனி நிறுவனத்திடம் இருந்து உரிமம்
தயாரிப்பாளர் ரவி, தாங்கள் சோனி மியூசிக் நிறுவனத்திடம் இருந்து முறைப்படி உரிமைகளைப் பெற்றே பாடல்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு பாடலுக்கும் சுமார் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், சோனி மியூசிக் நிறுவனத்துக்கும் இடையேயான பிரச்சனை காரணமாக, குட் பேட் அக்லி படத்திலிருந்து பாடல்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. தங்கள் தரப்பில் அனைத்து விதிமுறைகளும் முறைப்படி பின்பற்றப்பட்டதாகவும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வேறு கருத்து தெரிவிக்க முடியாது என்றும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரவி தெளிவுபடுத்தினார்.