நண்பர்கள் தினம் - தமிழ் சினிமாவுலகில் நட்பிற்கு உதாரணமாக விளங்கும் நடிகர்கள்
நம் வாழ்வின் முக்கியமாக பகுதிகளுள் ஒன்று நட்பு. பெயர், புகழ், காசு, பணம் உள்ளிட்டவைகளை எளிதாக சம்பாதித்து விடலாம். ஆனால் ஒரு உண்மையான நண்பனை சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்ல. அதன்படி, போட்டி, பொறாமை நிறைந்த இவ்வுலகில், குறிப்பாக சினிமாவில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நிலையிலும் தற்போது வரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் நட்பு பாராட்டுபவர்கள் என்றால் நம் நினைவிற்கு வருவது ரஜினிகாந்த், கமல்ஹாசன் தான். இவர்களுடைய நட்பு பயணம் 1975ம் ஆண்டு'அபூர்வ ராகங்கள்'படம் வெளியானப்பொழுது துவங்கியது. இப்படத்தினை தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து'இளமை ஊஞ்சலாடுகிறது','அவர்கள்' உள்ளிட்ட படங்களை நடித்தனர். நினைத்தாலே இனிக்கும்'படப்பிடிப்பிற்காக இருவரும் சிங்கப்பூர் சென்ற பொழுதுதான், இனி இருவரும் இணைந்து நடிக்காமல் தனிதனியே ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பது என்று முடிவுச்செய்துள்ளனர்.
புகழின் உச்சத்தில் இருந்தும் நட்பினை கைவிடாத நண்பர்கள்
இந்த முடிவு இவர்களை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டுச்சேர்த்தது. எனினும், கமலின் 'தாயில்லாமல் நானில்லை'படத்தில், தான் ஒரு கெஸ்ட் ரோல் செய்தாக வேண்டும் என்று ரஜினி தேவரிடம் செல்லச்சண்டையிட்டு நடித்தாராம். அதேபோல் 'தில்லு முல்லு' படத்தில் கமல் ஒரு கெஸ்ட் ரோல் செய்திருப்பார். பல படங்கள் தோல்வியடைந்த காலகட்டத்தில் கமல் காமெடி ஸ்டோரியில் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற படம் 'தெனாலி'. இதன் டைட்டிலை தேர்வுசெய்தது ரஜினி தான் என்பது அதன் வெற்றிவிழாவில் இயக்குனர் கூறித்தான் கமலுக்கே தெரியப்படுத்தப்பட்டது. சிகரத்தில் இருக்கும் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனதார பாராட்டி கொள்வதெல்லாம் அசாத்தியமானது. இவர்கள் பிரியவேண்டும் என்று பலரும் பல காலங்களாக எதிர்பார்த்து கொண்டிருக்கையில், இவர்களது நட்பு கிட்டத்தட்ட அரை சதம் அடித்து இன்றும் நீடித்து நிற்கிறது.