வீடியோ காலில் கணவருடன் சண்டை: தற்கொலை செய்து கொண்ட 'கயல்' சீரியல் நடிகை
செய்தி முன்னோட்டம்
தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகை சுபாஷினி, சென்னையில் உள்ள அவரது வாடகை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது திறமையான நடிப்பால் குறுகிய காலத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுபாஷினி 2012-ஆம் ஆண்டு இலங்கைப் பின்னணியில் உருவான 'இனி அவன்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல குறும்படங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு காணொளிகளில் நடித்து வந்தார். குறிப்பாக, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கயல்' தொடரில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் அவருக்குப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது.
திருமண வாழ்க்கை
திருமண வாழ்க்கை மற்றும் சென்னை வருகை
சுபாஷினிக்கும் பிபின் சந்திரா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தனது கணவருடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்த அவர், படப்பிடிப்புப் பணிகளுக்காகச் சென்னைக்கு வந்துள்ளார். சென்னையில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்து தனது கலைப் பணிகளை மேற்கொண்டு வந்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த அவர், தனது மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
முடிவு
கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீத முடிவு
ஞாயிற்றுக்கிழமை இரவு சுபாஷினி பெங்களூருவில் இருந்த தனது கணவருடன் வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அந்த உரையாடலின் போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுபாஷினி, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கணவரிடம் கூறிவிட்டுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அதிர்ச்சியடைந்த கணவர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கான உண்மையான காரணம் குடும்பப் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் அழுத்தங்கள் இருந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.