"அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது": மனம் திறந்த விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன், AK 62 படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக செய்திகள் வந்ததை அடுத்தும், மௌனம் காத்துவந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில், தனது மகனுடன் ஒரு பதிவை இட்டு, மறைமுகமாக AK 62 படத்தில் இருந்து விளக்கப்பட்டதற்கும், தன்னுடைய அடுத்த கட்ட பிளான்களை பற்றியும் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். "என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களை சுவாசிக்கவும், உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்கு கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது" எனக்கூறினார். "#neverevergiveup அடுத்த படத்திற்கு தயாராகிறேன்"என தனது அடுத்த படத்தின் திட்டத்தை பற்றியும் கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவன் பதிவு
நன்றி கூறிய விக்னேஷ் சிவன்
"கடவுளுக்கும், என்னுடைய கடினமான இந்த காலக்கட்டத்தில் என்னுடன் இருந்தவர்களுக்கும் நன்றி. என் மீதான உங்களின் நம்பிக்கை நான் யாரென்று என்னை அடையாளம் காண மட்டும் உதவவில்லை. எதிர்பாராத தருணங்களில் உறுதியுடன் இருப்பதற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது. உங்களால் நான் மகிழ்ச்சியாக எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறேன்" என பதிவிட்டுள்ளார். 'துணிவு' படத்தின் வெற்றிக்கு பிறகு, அதேபோன்றதொரு வெற்றியை தர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அஜித்தும், தயாரிப்பாளர் தரப்பும், விக்னேஷின் கதை பிடிக்காமல், அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டதாக செய்திகள் தெரிவித்தன. அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி, படத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டது. எனினும், இது குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விக்னேஷ் சிவனின் இந்த பதிவு, பல கேள்விகளுக்கு பதிலாக உள்ளது.