ராக்கெட் வேகத்தில் உயர்ந்த இயக்குநர் நெல்சனின் சம்பளம்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திடைப்படம் இந்த மாதம் 10ம் தேதி வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது ஜெயிலர் திரைப்படம். மேலும், தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியலில் இரண்டாது இடத்தைப் பிடித்திருக்கிறது ஜெயிலர். மேலும், தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தை இயக்குவதற்கு ரூ.22 கோடியை இயக்குநர் நெல்சன் சம்பளமாகப் பெற்றிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
புதிய படத்திற்கு நெல்சனின் சம்பளம் எவ்வளவு?
ஜெயிலர் திரைப்படத்திற்கு முன்பு, தளபதி விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தாலும், ரசிகர்களிடையே சரியான வரவேற்பைப் பெறவில்லை. மேலும், சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கும் ஆளானது 'பீஸ்ட்' திரைப்படம். மாபெரும் தோல்விக்கு பிறகு, நெல்சன் இயக்கியத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ஜெயிலர். ஜெயிலரின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்திலேயே அடுத்த திரைப்படத்தையும் இயக்கத் திட்டமிட்டிருக்கிறது, சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும், இந்தப் புதிய திரைப்படத்திற்கு அவருக்கு ரூ.55 கோடியை சம்பளமாக அந்நிறுவனம் கொடுக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.