துருவ நட்சத்திரம் பற்றி நக்கலடித்த எக்ஸ் பயனர் ஒருவரை, தனது பாணியில் மூக்குடைத்த GVM
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த திரைப்படத்தில் விக்ரம், சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ரித்து வர்மா என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. 2017 -இல் தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், பல சிக்கல்களையும், தடைகளையும் தாண்டி, ஒரு வழியாக வரும் நவம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த படமென்றாலும், இன்றும் இப்படத்தினை எதிர்பார்க்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். RAW ஏஜென்ட் கதாபாத்திரத்தில் 'சீயான்' விக்ரமை காண அவரது ரசிகர்கள் பலரும் ஆர்வத்தில் உள்ளனர். இந்த நிலையில், துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
கிண்டலடித்த ட்விட்டர் பயனர்; திருப்பி கொடுத்த GVM
படத்தின் ட்ரைலர் குறித்து பலரும் இயக்குனர் கௌதம் மேனனை பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், ஒரு எக்ஸ்(முன்னதாக ட்விட்டர்) பயனர் ஒருவர், "'துருவ நட்சத்திரம்' படம் அறிவிக்கப்பட்டபோது நான் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நான் 3 வருட அனுபவத்துடன் MNC இல் வேலை செய்கிறேன். உங்கள் வாழ்க்கை எப்படி மாறி இருக்கிறது?" என குதர்க்கமாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு GVM," அப்போது இருந்து தற்போது வரை நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருகிறேன். அதன்பிறகு 3 படங்கள், 4-ஆந்தாலஜி குறும்படங்கள், 5-மியூசிக் வீடியோக்களை இயக்கி வெளியிட்டிருக்கிறேன். மேலும் என்னுடைய 6வது அறிவையும் வளர்த்துக் கொண்டேன்" என 'நச்' பதில் தந்தார். கௌதம் மேனனின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது