LOADING...
$100 மில்லியன் மதிப்புள்ள அமெரிக்க F-35 விமானத்திற்கு குறி வைத்த ஈரான்! நடுவானில் தீப்பிடித்த வீடியோ; பின்னணி இதுதான்
அமெரிக்காவின் F-35 போர் விமானத்தை சுட்டதாக ஈரான் தகவல்

$100 மில்லியன் மதிப்புள்ள அமெரிக்க F-35 விமானத்திற்கு குறி வைத்த ஈரான்! நடுவானில் தீப்பிடித்த வீடியோ; பின்னணி இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 20, 2026
11:24 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஒன்றை ஈரானிய வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த வீடியோவை தெஹ்ரான் டைம்ஸ் பகிர்ந்துள்ளது. ஈரானிய புரட்சிகர காவல்படையின் கூற்றுப்படி, வியாழக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் மத்திய ஈரான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க F-35 விமானம், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டது. வெளியிடப்பட்ட வீடியோவில், அந்த விமானம் தாக்குதலுக்கு உள்ளாகி, புகை மூட்டத்துடன் நடுவானில் தள்ளாடுவதைக் காண முடிகிறது. அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்க அதிக வாய்ப்புள்ளதாக ஈரான் கூறுகிறது. மேலும், 125க்கும் மேற்பட்ட அமெரிக்க-இஸ்ரேல் ட்ரோன்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

விளக்கம்

அமெரிக்காவின் பதில்

அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட், அந்த விமானம் ஈரானில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவசர கால தரையிறக்கம் செய்ததை உறுதிப்படுத்தியுள்ளது. "விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, விமானி நலமாக உள்ளார்." என்று அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவை அமெரிக்கா குறைத்துக் காட்ட முயல்வதாகக் கூறப்படுகிறது. பென்டகன் இது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் எதையும் அறிவிக்கவில்லை.

பாதிப்புகள்

போரின் மற்ற பாதிப்புகள்

இந்த மோதல் தற்போது வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்களுக்கும் பரவியுள்ளது. ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. "எங்கள் உள்கட்டமைப்புகள் மீண்டும் தாக்கப்பட்டால், நாங்கள் சிறிதும் தயக்கமின்றிப் பதிலடி கொடுப்போம்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி எச்சரித்துள்ளார். பிப்ரவரி 28இல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 10 ரீப்பர் ட்ரோன்கள் உட்பட சுமார் 16 அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டதாக அல்லது சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. $100 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள F-35 விமானம் தாக்கப்பட்டிருப்பது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Advertisement