சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு பின்னர் அந்த பதிவை நீக்கிய பிரேமம் இயக்குனர்
தான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாகவும், யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எனவும் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டிருந்தார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், அவர் அந்த பதிவை தற்போது நீக்கி உள்ளார். "நான் சினிமா இயக்குவதை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் இருப்பதை நேற்று நானே கண்டறிந்தேன்." "நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல்கள் மற்றும் குறும்படங்களை ஓடிடிகளுக்காக இயக்குவேன்" "நான் சினிமாவை விட்டு விலக விரும்பவில்லை என்றாலும் என்னால் முடியவில்லை." "நான் கடைபிடிக்க முடியாத சத்தியங்களை செய்ய விரும்பவில்லை" என அவர் பதிவிட்டு இருந்தார்.
கலைஞர் டிவி மூலம் இயக்குனர் ஆனா அல்போன்ஸ் புத்திரன்
இவரின் இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து இந்த பதிவை அவர் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞர் டிவி நடத்திய நாளைய இயக்குனர் என்ற குறும்படம் தயாரிக்கும் போட்டியின் மூலம் திரை உலகிற்குள் அல்போன்ஸ் புத்திரன் நுழைந்தார். நிவின் பாலி, நஸ்ரியா உள்ளிட்டோரை வைத்து இவர் இயக்கிய நேரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் நிவின் பாலி, சாய் பல்லவியை வைத்து இயக்கிய பிரேமம் மெகா ஹிட் ஆகி தென்னிந்திய திரையுலகையே இவரை நோக்கி திருப்பியது. பின்னர் 7 வருட இடைவேளைக்கு பின், இவர் பிரித்விராஜ், நயன்தாரா உள்ளிட்டோரை வைத்து இயக்கிய கோல்ட் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கிப்ட் என்ற படத்தை தற்போது இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.