சந்தாதாரர்களை இழக்கும் டிஸ்னி+.. வளர்ச்சியடையும் ஜியோசினிமா!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் கடந்த 6 மாதங்களில் மட்டும் 84 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் 2% சந்தாதாரர்களை இழந்திருக்கும் டிஸ்னி+, இந்தியாவில் கடந்த காலாண்டில் மட்டும் 8% சந்தாதாரர்களை இழந்திருக்கிறது. இந்தியாவில் சந்தாதாரர் இழப்பிற்கு ஐபிஎல் மற்றும் எச்பிஓ உள்ளடக்கங்கள் அத்தளத்தை விட்டுவேறு தளங்களுக்குப் போனதும் ஒரு காரணம். கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஐபிஎல் தொடருக்கான டிஜிட்டல் உரிமையை வயகாம் 18 நிறுவனத்திடம் இழந்தது டிஸ்னி+ ஹாட்ஸ்டார். இதனைத் தொடர்ந்து 15-25 மில்லியன் சந்தாதாரர்களை அந்நிறுவனம் இழக்கலாம் என அப்போதே கணிக்கப்பட்டிருந்தது. சக்சஷன், கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் வெஸ்ட் வேர்ல்டு உள்ளிட்ட பிரபலமாக எச்பிஓ தொடர்கள் டிஸ்னி+ தளத்திலிருந்து வேறு தளங்களுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
ஜியோசினிமாவின் எழுச்சி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிடம் இருந்து ஐபிஎல் டிஜிட்டல் உரிமத்தைக் கைப்பற்றி ஜியோசினிமா ஓடிடி தளத்தின் மூலம் இலவசமாக ஒளிபரப்பி வருகிறது வயகாம் 18 நிறுவனம். இதன் காரணமாக ஐபிஎல் தொடர் தொடங்கிய முதல் வாரஇறுதியில் மட்டும் 5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது ஜியோசினிமா செயலி. முதல் ஐந்து வாரங்களில் மட்டும் 1,300 கோடி முறை ஜியோசினிமா தளத்தில் ஐபிஎல் தொடர் பார்க்கப்பட்டிருப்பதாகவும், சராசரியாக ஒரு நபர் 60 நிமிடங்களை தங்கள் தளத்தில் ஐபிஎல் தொடரைப் பார்க்க செலவழிப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இந்த சந்தாதாரர் வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ள எச்பிஓ நிறுவனத்துடன் அதன் உள்ளடக்கங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது ஜியோசினிமா. மேலும், 100 புதிய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸையும் தங்கள் தளத்தில் வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது.