10 நாள் பிரேக்; அக்டோபர் 15 முதல் கூலி ஷூட்டிங் மீண்டும் தொடங்கும்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இருதயத்தின் முக்கிய ரத்தநாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், அதற்காக ஸ்டென்ட் பொறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ரஜினிகாந்த் தற்போது சிகிச்சை நிறைவடைந்து, வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது, "ரஜினிகாந்த் நன்றாக உள்ளார். நேற்றிரவு கூட அவரிடம் பேசினேன். மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை பண்ண வேண்டியது இருக்குனு 40 நாட்கள் முன்னாடியே ரஜினிகாந்த் எங்ககிட்ட சொல்லிவிட்டார். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து வருகிறது" என்றார்.
"படப்பிடிப்பிற்கு 10 நாள் பிரேக்"
மேலும் பேசிய லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தின் பகுதிகள் ஷூட் முடிந்தது, அதன் பின்னரே அவர் சிகிச்சை பெற சென்றார் என்று தெரிவித்தார். "இன்றுடன் (அக்டோபர் 4) உடன் நாகார்ஜூனா சாரின் ஷூட் நிறைவு பெற்றது. இதன் பின்னர் 10 நாள் பிரேக். அதன் பின்னர், அக்டோபர் 15 முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும்" என லோகேஷ் கூறினார். மேலும் அவர், "ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி நிறைய செய்திகள் வந்திருந்தன. அது எங்களுக்கே பயமாக இருந்தது. ஆனால் அதில் எதுவும் உண்மை கிடையாது. ரஜினிகாந்த் உடல்நிலை தான் முக்கியம். இறைவன் அருளால் அவர் நன்றாக இருப்பார்" எனக்கூறினார்.