மீண்டும் சர்ச்சையில் கூல் சுரேஷ்; கண்டனங்களை ஈர்த்த அவரின் நடவடிக்கை
சமீபத்தில் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடிக்கும் 'சரக்கு' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் மன்சூர் அலிகான் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இவர்களோடு, கூல் சுரேஷ்-உம் கலந்துகொண்டார். விழா மேடையில், சரக்கு பாட்டிலோடு வந்தது மட்டுமின்றி, யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த தொகுப்பாளினி கழுத்தில் மாலையை அணிவித்தார் கூல் சுரேஷ். எதையும் வித்தியாசமான முறையில் செய்து தன்னை தானே வைரலாக்கி கொள்ளும் கூல் சுரேஷ், இந்த விழா மேடையிலும் சற்று ஓவராக போக, அங்கிருந்த பத்திரியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முகம் சுளித்து அவரை கண்டித்துள்ளனர்.
கோவத்தை வெளிப்படுத்திய தொகுப்பாளினி
கூல் சுரேஷின் இந்த செயலால், முதலில் அதிர்ந்த அந்த தொகுப்பாளினி, விருட்டென அந்த மாலையை கழற்றி தூக்கியெறிந்தார். இதனைத்தொடர்ந்து மேடையில் இருந்த மன்சூர் அலிகான், அவரை கண்டித்தார். எனினும் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சிலர் மன்சூர் அலிகானிடம் கூல் சுரேஷின் அநாகரிக செயல் குறித்து கேட்டபோது,"நான் முன்பே அவரை கண்டித்து விட்டேன். எனினும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைக்கிறேன்"எனக்கூறி, கூல் சுரேஷை மன்னிப்பு கேட்க வைத்தார். எனினும் கூல் சுரேஷ்,"நான் மேடையில் இருக்கும் போதே அந்த பெண்ணிடம் பேசியுள்ளேன், இதை விளையாட்டாகதான் செய்தேன்" எனக்கூற, அந்த தொகுப்பாளினியோ, "உங்களிடம் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என போட்டுடைத்தார். உடனே, 'சாரி தங்கச்சி' என கூறி அங்கிருந்து நகர்ந்தார் கூல் சுரேஷ்.