இன்று தமிழ் திரையுலகின் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் பிறந்தநாள்
இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம் 'நீர் குமிழி', இப்படத்தினை தொடர்ந்து அவரது கடைசி படமான 'பொய்' திரைப்படம் வரை அவரது அனைத்து படங்களிலுமே யாரும் தொட்டிடாத ஒரு கதைக்களமும், காட்சியமைப்பும் நிறைந்திருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல நடிகர்-நடிகைகளை இவர் தனது படத்தில் அறிமுகம் செய்துள்ளார். இத்தகைய நீங்காப்புகழுக்கு சொந்தமான இயக்குநர் கே.பாலச்சந்தரின் 93வது பிறந்தநாள் இன்று(ஜூலை.,9)கொண்டாடப்படுகிறது. திரையுலகில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பணியாற்றி 'இயக்குநர் சிகரம்' என்னும் அங்கீகாரத்தினை பெற்ற இவர் 1930ம்ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார். இவர் திரைப்பட உலகிற்குள் நுழையும் முன்னர் நாடகத்துறையிலும் தனது முத்திரையினை பதித்துள்ளார்.
இந்திய திரைப்படத்துறை மிகுந்த உயர்ந்த விருதான தாதே சாஹிப் பால்கே விருதினை பெற்றவர்
இவரின் திரைவாழ்க்கை எம்.ஜி.ஆர். நடித்த 'தெய்வத்தாய்' என்னும் படத்தின் வசனகர்த்தாவாக தான் துவங்கியதாம். அதன்பின்னர் 1965ம்ஆண்டு அவர் இயக்கிய 'நீர்க்குமிழி' படம் வெற்றியடைந்தது. தனது வாழ்வில் பல இன்னல்களை சந்தித்த பின்னரும் அவர் பல படங்களை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். அக்காலத்தில் மனித உறவுகளுக்கிடையே ஏற்படும் உணர்வுகள், பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை அவர் கதாபாத்திரத்தின் மூலம் கூறிய விதம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றது. காதல் பரிமாணங்களை எடுத்துரைப்பதில் அவருக்கு நிகர் எவருமில்லை. இந்திய திரைப்படத்துறை மிகுந்த உயர்ந்த விருதான தாதே சாஹிப் பால்கே உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வாங்கி குவித்த இவர் 2014ம்ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவர் உருவாக்கிய சாம்ராஜ்யம் என்றும் மறையாது என்பதே உண்மையாகும்.