சென்னையில் உலக சினிமா விழா 2024: தேதி, நேரம் உள்ளிட்ட விவகாரங்கள்
சென்னையில் நாளை முதல் உலக சினிமா விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 51 நாடுகளில் இருந்து 146 குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் திரையிடப்படும். சென்னை உலக சினிமா அறக்கட்டளை ஏற்பாடு செய்து, சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை தொடக்க விழாவுடன் தொடங்குகிறது. சென்னை உலக சினிமா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 112 நாடுகளைச் சேர்ந்த 3,321 குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்து திரையிடப்பட உள்ள திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் சுமார் 20 திரைப்பட கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், வெனிசுலா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்த கலைஞர்கள் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருப்பார்கள்.
எங்கே? எப்போது?
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இவ்விழா நடைபெறவுள்ளது. தொடக்க விழாவில் வெனிசுலாவின் பொலிவேரியன் குடியரசின் தூதர் கபாயா ரோட்ரிக்ஸ் கோன்சாலஸ் கலந்துகொள்வார் மற்றும் வெனிசுலா திரைப்படங்கள் 'கன்ட்ரி ஃபோகஸ்' பிரிவின் கீழ் திரையிடப்படும். மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த விழாவில், திரையுலகம் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் பங்கேற்கின்றனர். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழா அக்டோபர் 4 முதல் 10 வரை நடைபெறுகிறது. இவ்விழாவினை காண நுழைவுக் கட்டணங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.