நடிகர் அர்ஜுன் அளித்த புகாரின் பேரில் பயில்வான் ரங்கநாதன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
செய்தி முன்னோட்டம்
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் புகாரின் பேரில், நடிகரும் யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் மற்றும் மேலும் ஒருவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்ளாதது குறித்துப் பல்வேறு யூடியூப் சேனல்களில் அவதூறான வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் நேரில் புகார் அளித்திருந்தார்.
அர்ஜுன் வேதனை
ஒரு தந்தையாக அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது
தனது புகாரில், எந்தவித ஆதாரமும் இன்றி தனது மகளின் குணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அர்ஜுன் வேதனை தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, தனது மகளை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என முத்திரை குத்திப் பொய்யான கதைகளை புனைந்து பரப்புவது பொறுப்பற்ற செயல் என்றும் அவர் சாடியிருந்தார்.
பொது வாழ்க்கையில் இருப்பதால் ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது எனக் கூறிய அர்ஜுன், ஒரு தந்தையாக இதனை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனக் குறிப்பிட்டு நடவடிக்கை கோரியிருந்தார்.
3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை
நடிகர் அர்ஜுன் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் குற்றப்பிரிவில் பயில்வான் ரங்கநாதன் நேரில் ஆஜரானார்.
அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.